மறந்திருப்பாயா?!

எல்லோருடனும் பேசிப் பிரிகையில்
எல்லோருக்கும் வார்த்தைகளில் சொல்லிவிட்டு
என்னிடம் மட்டும்
பார்வையால் சொல்லிப் பிரிவாயே...
மறந்திருப்பாயா அதை?!!!



நாம் காதலிப்பதாய்
எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்த காலத்தில்
உன் பெயரைக் கூப்பிட்டால் நானும்
என் பெயரைக் கூப்பிட்டால் நீயும்
திரும்பிக் கொண்டிருந்தோமே...
மறந்திருப்பாயா அதை?!!!


நாம் காதலிப்பதாய்
எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்த காலத்தில்
யதேச்சையாக நாம் இருவரும்
ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தால் கூட
அன்று முழுவதும்
உன் முகம் சிவந்திருக்குமே...
மறந்திருப்பாயா அதை?!!!


நாம் காதலிப்பதாய்
எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்த காலத்தில்
என் நண்பர்களின் குரல் கேட்டாலே
என்னை அங்கு எதிர்பார்த்து சுற்றும்முற்றும் தேடி
என்னைப் பார்த்ததும்
நான் அங்கு இருப்பதையே உணராதவள் போல்
நடந்துக்கொள்வாயே...
மறந்திருப்பாயா அதை?!!!

நான் தூரத்தில் இருக்கும்போதெல்லாம்
என்னையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு
சட்டென்று நான் உன்னைப் பார்க்கும்போது திடுக்கிட்டு
பார்வையை என் மேல் இருந்து விலக்கத் தடுமாறி
நீ என்னைப் பார்க்கவில்லை என்று உணர்த்துவதற்காக
ஏதேதோ செய்து
எங்கெங்கோ பார்த்து படாதபாடு படுவாயே...
மறந்திருப்பாயா அதை?!!!

நாம் காதலிப்பதாய்
எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்த காலத்தில்
தப்பித்தவறி நீ என் எதிரில் வந்துவிட்டாலும்
ஒரு சின்ன திடுக்கிடலுடன் கூடிய
நாணச்சிரிப்புடன் ஓடி மறைவாயே...
மறந்திருப்பாயா அதை?!!!


அன்றொரு நாள் நான் ஒரு மேடையில் பரிசு வாங்கியபோது
எல்லோரும் கைதட்டி முடித்தபோதும்
ஓயாமல் ஒலித்த உன் கைத்தட்டலுக்கு
சபையே திரும்பிப் பார்த்ததே...
அதை ஒரு நொடி தாமதமாய் உணர்ந்து...
உணர்ந்ததும் சட்டென்று நாக்கைக் கடித்துக்கொண்டு
நாணத்துடன் தலைக்குனிந்தாயே...
மறந்திருப்பாயா அதை?!!!

நாம் காதலிப்பதாய்
எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்த காலத்தில்
தினந்தோறும் வகுப்பறையில்
நான் வரும்வரை வாசலையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு
நான் வந்தபின் என் பக்கமே திரும்பாமல்
வேண்டுமென்றே உன் தோழிகளுடன்
பேச ஆரம்பித்துவிடுவாயே
மறந்திருப்பாயா அதை?!!!

(((நான் வாழ்ந்த தருணங்கள் என்று குறிப்பிடுவது interaction வகையான கவிதைகளை)))